Thursday, March 4, 2010

ஆத்திரம் பொங்கி வருகிறது

ஆத்திரம் பொங்கி வருகிறது.


ஜெயமோகனுக்கு ஒரு பதில்பதிவு எல்லாம் எழுதுவேன் என்று நான் நினைத்ததே இல்லை. முழுவதும் படிக்க முடிந்தால்தானே பதில்/ விமர்சனம் எழுதுவது! ஆனால் நித்யானந்தாவின் இன்றைய நிலைமை குறித்து வந்த பதிவைப் படிக்கச்சொல்லி சில நண்பர்கள் வற்புறுத்தியதால் மெதுவாகக் கஷ்டப்பட்டுப் படித்தேன்.

அதில் சொல்லப்பட்டிருப்பவை குறித்து என் எண்ணங்கள்-

நித்யானந்தர் ஊடகங்கள் முன் அம்பலப்பட்டிருப்பதில் அறச்சிக்கல்களோ அல்லது வேறு ஏதேனும் தத்துவப் பிரச்சினைகளோ இருப்பதாக நான் நினைக்கவில்லை.
அம்பலப்பட்டது ஒரு தனிமனிதன் என்றால் இந்து மனங்கள் எந்தச் சிக்கலுக்காக முண்டியடித்து அவன் படத்தைப் போட்டுக் கொளுத்துகின்றன? அவன் முன்வைத்த தத்துவம் என்னவென்று தெரியாது, என்னையே துன்புறுத்திக்கொண்டு இம்மாதிரி எழுத்துக்களை நான் படிப்பதில்லை. இந்தக் கட்டுரையே போதும் இதற்கு மேல் நித்யா பெயரில் எவனோ எழுதியதெல்லாம் தத்துவம் என்று படிக்கும் பொறுமை எனக்கு இல்லை.

அறச்சிக்கல் என்றால் என்ன? இதே கட்டுரையில் பின்னர் வரும் தர்மம் சம்பந்தப்பட்ட விஷயமா? நீதிக்கும் நியதிக்கும் இடைபுகுந்து தப்பிக்கத்தெரியாத நிலைதான் அறச்சிக்கலா? அறம் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று அல்லவா? இல்லை இந்து அறம் முஸ்லிம் அறம் என்றெல்லாம் இருக்கிறதா?

இவனது கேவலம் என்று எல்லாரும் கொதிப்படைவது அவனது காம இச்சையை அவன் பூர்த்தி செய்துகொண்டதற்கா இல்லை அந்த பிம்பம் தகர்க்கப்படுகிறதே என்றா? எல்லா சாமியார்களையும் சகித்துக்கொள்ளாதவர்களுக்கும் இன்று இந்துமுகத்தில் இன்னுமொருமுறை கரிபூசப்பட்டதே என்று கலங்குபவர்களுக்கும் ஒரே அறப்பார்வைதானா?

நான் இந்து, நான் இப்படித்தான் எனும் ஆணவத்தின் அடக்கி வாசிக்கும் மொழியா?

இல்லை இந்து சாமியார் இப்படித்தானே செய்வான் இதற்கென்ன இவ்வளவு கொதிப்பு என்ற அசட்டையான மனநிலையா? திமிரா? இதற்கெல்லாம் அறம் வெங்காயம் என்று சொல்பவர்கள் முட்டாள்கள் எனும் ஏளனமா?

ஊடகத்தால் உருவாக்கப்பட்ட ஒருவர் ஊடகத்தால் அழிக்கப்படுகிறார், அவ்வளவுதான். அதற்கு மேல் ஏதுமில்லை.
இவ்வளவுதானா? சில அற்பர்கள் வெளிப்படையாகக் காசுக்குக் குரைத்தார்கள், வேறு சில அற்பர்கள் இன்னும் மிகுந்த தொலைநோக்கோடு பரந்த இந்து சாம்ராஜ்யக் குறிப்புணர்ந்து சால்ஜாப்பு சொல்கிறார்கள். இருவருக்குமே இதே ஊடக உதவிதானே. ஊடகங்கள் இல்லாவிட்டால் ராமபாலம் கதையை நாஸாவின் ஆதாரம் என்றெல்லாம் பொய் சொல்லி விற்க முடியுமா?

இவன் அவமானப்பட்டான் என்றால் இவன் இந்துப் பிரதிநிதி இல்லை, ஊடக மாயை! அவனுக்கும் இந்துமத முகமூடி இருந்ததால்தானே இப்போது எல்லா சேனைகளும் துள்ளி வருகின்றன? எங்கள் வீட்டுத் திருடனை ஊரெல்லாம் சேர்ந்து அடிக்க வேண்டாம் நாங்களே கண்டிக்கிறோம் எனும் மனப்பான்மைதானே!

இந்து ஞானமரபின் முக்கியமான நிறுவனமாக உள்ள துறவு என்ற வழியை,சிறுமைப்படுத்துவதாக அது அமையுமே என்றுதான் எனக்கும் தோன்றியது.திட்டமிட்ட சிறுமைப்படுத்தல் நிகழ்ந்துகொண்டிருக்கும் இச்சூழலில் கண்டிப்பாக இது ஓர் அடிதான் என்று.
திட்டமிட்டு யாரும் துறவிகளைச் சீண்டுவதில்லை. துறவி என்ற பெயரில் இவர்கள் செய்யும் திருட்டுத்தனத்திற்குத் தான் எதிர்ப்பு. அவ்வளவு அற்புதமான மரபுஇவ்வளவு எளிதாகச் சிறுமைப்படுத்தப்பட்டால், அதன் வீச்சும் வீரியமும் எவ்வளவு?

இந்து மரபில் மூன்று கூறுகள் உள்ளன என்று சொல்லலாம். ஒன்று,தத்துவார்த்தமான தளம். இரண்டு , வழிபாடு,பக்தி சார்ந்த தளம். மூன்று, பழங்குடி நம்பிக்கைகள், சடங்குகள் சார்ந்த தளம். ……நம் சூழலில் பிந்தைய இரண்டும்தான் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வந்தன. அவை அறிவார்ந்த தேடல் கொண்ட ஒருவருக்கு முழுநிறைவை அளிப்பதில்லை.
அறிவார்ந்த தேடலுக்கு எவை உதவுகின்றன? வேதங்களா உபநிஷத்துக்களா?இடைச்செருகல்கள் நிறைந்த கீதையா? அறிவார்ந்த தேடலுக்காக நித்யா போன்றவனெல்லாம் கிட்டத்தட்ட கடவுளாக மாறும் கூட்டம் எப்போதாவது அறிவுக்கு முன்னுரிமை கொடுத்திருக்கிறதா?

அறிவுள்ளவன் எவனாவது இந்துமதத்தின் அடிநாதமாக ஓடிக்கொண்டிருக்கும் சாதீயக் கேவலத்தைச் சகித்துக்கொண்டிருப்பானா? அப்படிப்பட்ட அநாகரிகத்துடன் ஒத்துப்போகும் போது அறிவு என்பது எது? சந்தர்ப்பவாதமா? சட்டத்திற்குப் பயந்து உள்ளேயே புகைந்து கொண்டிருக்கும் ஆதிக்க ஆணவமா?

இந்து தத்துவ மரபை நவீன சிந்தனைகளுடன் உரையாடச்செய்து முன்வைக்கவேண்டிய தேவை ஏற்பட்டது. அதைச் செய்தவர்கள் ஜெ.கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள்
இங்கே தான் குயுக்தி வெளிப்படுகிறது. விவேகானந்தர் இந்து கோட்பாடுகளை முன்வைத்து, உபநிஷத் சாரத்துடன் அத்வைத மார்க்கத்தைப் பரப்பியதைப் போல்,ஜெ.கிருஷ்ணமூர்த்தி செய்யவில்லை. ஜேகே, ஓஷோ இருவருமே மத அடையாளங்களைத் தவிர்த்தவர்கள். அவர்களின் அறிவுத்திறன் இவர்களுக்குத் தேவைப்படுவதால்தான் ஜேகே கூட இந்துதத்துவ மரபின் உரையாடல்களை முன்வைத்ததாக இப்படி ஒரு பொய். அடுத்து புத்தர்கூட இந்துமதத்தைத்தான் முன்வைத்தார் என்று சொல்வார்கள்.

அதாவது ஒரு தேவை சமூகத்தில் உள்ளது. அந்தத் தேவையை நிறைவேற்றி தங்களை நிறுவிக்கொள்கிறார்கள் இவர்கள். பெரும் அமைப்புகளை உருவாக்குகையில் அமைப்புகளுக்குரிய அத்தனை சிக்கல்களையும் சந்திக்கவேண்டியிருக்கிறது.
மதம் என்பது ஒரு மார்க்கமாக வாழ்முறையாகத்தான் சொல்லிக்கொண்டார்கள்,இப்போது அது நிறுவனம் என்று ஒப்புக்கொள்கிறார்கள். ஒரு பெரிய மதமே இருக்கும் போது அங்கே எதற்கு துணை நிறுவனங்கள்? இவ்வளவு தத்துவ பாரம்பரியமிக்க மதவழி வருபவர்களுக்கு ஒரு நிறுவனத்தை நேர்மையுடன் செயல் படுத்தத் தெரியாதா?
பூஜ்யம் கண்டுபிடித்த மதம் என்று சொல்லிக்கொள்வது எல்லாம் கணக்கைத் தப்பாக எழுதி ஏமாற்றத்தானா?

நித்யானந்தர் மாட்டிக்கொண்டது சமீப காலமாக நடந்துவரும் ஊடகப்படையெடுப்பின் ஒரு விளைவு….. இன்று இழிவுபட்டு நிற்பது நித்யானந்தர் என்ற மனிதரே ஒழிய எந்த மரபின் தோற்றத்தை அவர் தன் வேஷமாகக் கொண்டாரோ அந்த தோற்றம் அல்ல
ஒரு கம்யூனிஸ்டின் கதை எழுதுவதாக ஆரம்பித்து மொத்த கம்யூனிச சித்தாந்தத்தையே இழிவு படுத்தும் போது பானையின் ஒரு பருக்கையே உதாரணம்,மாட்டிக்கொண்டால் ஒரு பருக்கை பானையாகாது எனும் மொழிவிளையாட்டு!

ஆனால் காலம்தோறும் எந்த மோசடியாளனும் எளிதில் அணியக்கூடியதாகவே காவி இருந்துள்ளது. ஆனாலும் காவியுடை அதன் தனித்துவத்துடன் இருந்துகொண்டுதான் இருக்கிறது.
எந்த மோசடியாளனும் எந்த உடையை வேண்டுமானாலும் அணியலாம். ஆனால் அந்த உடை அணிந்தவன் நம்ம ஆளு என்று குலாவுவதும், அவன் மாட்டிக்கொண்டால் ஜாதியைப் பொறுத்து அது குற்றமா இல்லை சறுக்கலா என்றெல்லாம் பேசும் அயோக்கியத்தனத்திற்கும் இந்த வர்ணத்திற்கும் ஏன் இவ்வளவு நெருங்கிய தொடர்பு?

அப்படி என்ன தனித்துவம் இதில்? இந்த ஆடையின் ஆரம்பம் என்ன? அன்றைய சூழலில் அவசியம் கருதி உருவான நிறத்துக்கு இன்று பட்டில் அதே நிறத்தில் நடிக்கப் புறப்படும் போலிகளுக்கும் என்ன தொடர்பு? காவிக்கு அன்றிருந்த அர்த்தம்தான் இன்னும் இருக்கிறதா?

காவி என்பது ஒரு குறியீடு என்றால் இன்று அது எதைக் குறிக்கிறது?

வழித்துணையாக ஆவது தங்கள் பாதையில் தாங்களே சென்றவர்களின் சொற்கள் மட்டுமே. ஆகவே ஒருகணமும் சிதையாத கவனம் அதற்கு தேவையாகிறது. அதைத்தான் உபநிடதம் சொல்கிறது ஜாக்ரதை!’………
ஜாக்ரதா என்பது விழிப்புணர்வு!

எவனுக்கெல்லாம் கூச்சமில்லையோ, குற்ற உணர்வு இல்லையோ அவனெல்லாம் தன் பாதையில் தானே நடந்து சென்றதாகத்தான் சொல்கிறான். அவன் மாட்டிக்கொள்ளாதவரை ஞானி, மாட்டிக் கொண்டால் ஏமாற்றுப் பேர்வழி!

ஜாக்ரதா என்று குறிப்பிடப்படும் விழிப்புணர்வு எச்சரிக்கை உணர்வு அல்ல; அது அறிவின் கூர்மை நிதானத்துடன் வெளிப்படும் மனநிலை.

விழிப்புடன் இருப்பது மாட்டிக் கொள்ளாமல் இருக்கத்தான் என்று நினைத்தேன்,இவர்கள்தான் இனி மாட்டிக்கொள்ளாமல் இருப்பது என்று காட்டுகிறார்கள்.

நம்மை நாமேதான் பெரும்பாலும் ஏமாற்றிக்கொள்கிறோம்...இத்தகைய தருணங்களில் நாம் உணரவேண்டிய ஒன்றுண்டு. எது இந்து ஞான மரபின் சாரமோ அதை முன்வைப்பதே சரியான வழியாக இருக்க முடியும். எது உண்மையோ அதுமுன்வைக்கப்படவேண்டும். அது உண்மை என்றால் அதற்கு தன்னை நிறுவிக்கொள்ளும் வல்லமை இருக்கும். போலிகளை, மோசடிகளைச் சார்ந்து உண்மை நிலைகொள்ள முடியாது. அது அவர்களை பிளந்துகொண்டுதான் தன் வழியைக் கண்டுபிடிக்கும்.
இல்லாத ஒன்றை எவ்வளவு வாய் கிழியக் கத்தினாலும் அது நிலைக்காது.

இந்து மத ஞானம் என்பது எந்தக்காலத்திலிருந்து? இந்து என்று இஸ்லாமியர்கள் பெயர் வைத்தார்களே அன்றிலிருந்தா?
இந்திய ஞானி வேறு இந்து ஞானி வேறு.
தொன்மையான இந்நாட்டு ஞான மார்க்கம் கேள்விகளை உள்ளடக்கியது. கேள்விகள் நெருடலானபோதுதான் பதில் தர முடியாத வர்க்கம் பாமரர்களிடமிருந்து பலவற்றை மறைத்து வைத்தது. தெளிவை நோக்கியது இந்திய ஞானம், திருட்டுத்தனத்தை உருவாக்கியது இந்து ஞானம். இந்தத் திருட்டுத்தனம், தானே பிளந்து கொண்டு அழியும்.

நித்யானந்த சாமியாரின் மீது எனக்கு எப்போதும் மரியாதையோ நம்பிக்கையோ இருந்தததில்லை. எல்லா அயோக்கியர்களிடமும் இருந்த கோபம்தான் அவன் மீதும். அந்தப் பெண்ணுடன் சுகமாகக் கிடந்த படம்கூட எனக்குக் கோபம் வரவழைக்கவில்லை. ஆனால் இந்த விஷயத்திற்காக ஜெயமோகனைக்கூடப் படிக்க வைத்து விட்டானே என்று தான் ஆத்திரம் பொங்கி வருகிறது.
http://rudhrantamil.blogspot.com/2010/03/blog-post_03.html

ஒற்றை விரல்

'ஒரு குழந்தையாகவே
உன்னை விட்டு வைக்கலாம்
காலம் ' என்றேன்..
'போப்பா.. நீங்க
இன்னும் வளரவே இல்லை '
என்றாள் அவள் !

இரவின் நிசப்தம்
கிழித்த அழுகை
ஒரு குழந்தையின்
பசி என்று
திரும்பிப் படுத்தபோது
அவள் எழுந்து போனாள்
நீர் குடிக்க
என் அறியாமையைக்
கேலி செய்து .

இது வரை
பூக்கத் தெரியாத எனக்கும்
நீர் ஊற்றிப் போகிறது
அந்தப் பெயர் தெரியாத மேகம்..
என் பசுமை அப்படியே
உதிர்ந்த இலைகளுக்குப் பின்னும்.

சொட்டிக் கொண்டிருக்கிறது
மனசு
உன் ஒற்றை விரலுக்காக !

சொந்த பந்தங்கள் - 4

சொந்த பந்தங்கள் - 4



அக்கா

தினம் தினம் சண்டையிட்டாலும்
சிறுவயது முதல் வழிகாட்டி

என்னதான் சண்டையென்றாலும் இளவலை
மற்றவர் முன் விட்டுக்
கொடுக்காத பாசப்பறவை.

தங்கை

அரசு பாடத்திட்டம் எப்போது
மாறும் என்ற ஏக்கத்துடன்
வாழும் ஒரு ஜீவன்

இதுவரை கிடைத்ததெல்லாம்
மூத்தோரின் பழைய புத்தகங்கள்
என்பதால்

பொதுவாய்

திருமண சீர்வரிசை ஏற்றதாழ்வு
பிரச்சினை வந்தது பெற்றோருடன்

பெற்றோரின் இறப்பு செய்தி

மனம் விட்டு ஒன்றுகூடி
அழுத ஜீவன்கள்


நித்யானந்தாவை நன்றாக பாருங்கள்!

nithyananda

நித்யானந்தா தயாராக இருந்தான். ஹரித்துவாரில் 12 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் மகா கும்பமேளாவுக்கான புனித பயணத்தை பக்தகோடிகள் புடைசூழ, இந்த மார்ச் 4ம்தேதி தலைமை தாங்கிச் செல்ல வேண்டும் அவன். ஒன்பது கோடி பேர் வருவார்கள் என பீற்றிக்கொள்ளும் அந்த வைபவத்தில், செய்த பாவங்களையெல்லாம் கங்கையில் கழுவி எழுந்திருக்க முடியும். அதற்குள் அந்தப் பாவங்களில் கொஞ்சத்தை சன் டி.வி பிட்டு பிட்டுக் காண்பித்துவிட்டது.

எவ்வளவு பரபரப்பும், ஆர்வமும் நம் மக்களுக்கு. நடக்கவே நடக்காத விபரீதம் போல, ‘குமுதத்தில் எழுதிய அவரா இவர்’ என்பது போல பார்த்தாலும், அந்தக் காட்சி குறித்த ரகசிய ஆர்வம் கொப்பளித்துக் கொண்டு இருந்தது. அதைப் பார்க்காதவர்கள் பாவம் செய்தவர்களைப் போல துடித்துத்தான் போனார்கள். இந்த இயல்புகள் தெரிந்துதானே சன் டி.வி அறுவடை செய்கிறது. தங்கள் வியாபார ரீதியான வெற்றிகளுக்கு, முதலாளிகள் தாங்கள் கட்டியமைத்த புனிதங்களையும் போட்டு உடைப்பார்கள். அவர்கள் நலன் சார்ந்தே இந்தக் காரியத்தை செய்வார்கள்.

இந்துத்துவா சக்திகளுக்கு அடிவயிறு பற்றிக்கொண்டது. சில இடங்களில் நித்யானந்தாவின் மடங்களை முற்றுகையிடவும், அவனது படங்களை நடுத்தெருவில் எரிக்கவும் வெறி கொண்டு நின்றனர். நேற்று வரை அவர்கள்தான் இந்த நித்யானந்தாக்களுக்கு ஆராதனை செய்துகொண்டு இருந்தவர்கள். இப்படிப்பட்ட போலிச்சாமியார்களுக்கு எதிரானவர்கள் என்பதை உடனடியாக காட்டிக் கொண்டால் மட்டுமே, தங்களை நிலைநிறுத்திக்கொள்ள முடியும் என்பதும், இனியும் தொடர்ந்து மற்ற சாமியார்களைக் காப்பாற்ற முடியும் என்பதும் அவர்களுக்குத் தெரியும். அவர்கள் நலன் சார்ந்தே இந்தக் காரியங்களைச் செய்கிறார்கள்.

இதுவரை அவனைப்பற்றி ‘ஆஹோ ஓஹோவென்றும்’, ‘அப்படியாம், இப்படியாம்’ என்றும் பிம்பங்களை கட்டமைத்த, புத்திசாலிகள் என அறியப்பெற்றவர்கள் இப்போது என்ன செய்வதென்று அறியாமல் கையைப் பிசைந்துகொண்டு நிற்கலாம். அறிவித்த ஆருடங்களும், பிரமைகளும் நாலுபேர் நடுவில் பொய்த்துப் போய் தங்கள் சிந்திக்கும் திறன் கேள்விக்குள்ளாக்கப்பட்டிருப்பது குறித்து அவமானப்படலாம். அவர்களும் தங்கள் நலன் சார்ந்தே இருப்பார்கள்.

பொதுவாக யோசிக்க வேண்டிய பல விஷயங்களை வெகுஜனப்பரப்பில் இருந்து விலக்கி விடுகிற இயல்புகளுக்கு நாமே ஆளாகிவிடுகிறோம். பரபரப்பிலும், அந்தரங்கங்கள் பொதிந்தச் செய்திகளிலும் அடிபட்டுப்போகிற ஒரு கேள்வியை மட்டுமே இந்த இடத்தில் கேட்கத் தோன்றுகிறது.

சென்ற வருடத்தின் இறுதிநாளில் நித்யானந்தா எழுதிய ‘முக்தி வாழ்வு’ என்னும் நூலை கர்நாடகாவின் முதன் மந்திரி எடியூரப்பா பயபக்தியோடு வெளியிடுகிறார். அவனது பிறந்தநாளோடு புத்தாண்டு துவங்கும் அடுத்த நாளில் ‘அவர் கல்பதரு தரிசனம் தருவார்’ என தினமணி நாளிதழ் செய்தி வாசிக்கிறது. “நாம் வாழும் காலத்திலேயே பரம்ஹம்ச நித்யானந்தா போன்றவர்கள் பெரும் ஆன்மீக மறுமலர்ச்சியை ஏற்படுத்தி வருகிறார்கள்” என்று ஒருவர் பெருமிதம் கொள்கிறார். அவனது எழுத்துக்களைத் தொடராக படிப்பதற்கும், கொண்டாடுவதற்கும் ஒரு ஜனத்திரள் இருக்கிறது. அமெரிக்காவில், கொலம்பஸில் 2007ல் இந்த நித்யானந்தா கோவிலைக் கட்டி பிரண பிரதிஸ்டை செய்தது குறித்து இன்னொருவர் குறிப்பிடுகிறார். ஏராளமான கல்வி, மருத்துவச் சேவைகள் அவனது பெயரில் நடக்கின்றன. கோடி கோடியாய் சொத்துக்களோடு பல நிறுவனங்கள் அவன் பெயரில் இயங்குகின்றன. அவன் நின்றால், நடந்தால், உட்கார்ந்தால், என எல்லாவற்றையும் தரிசனமயமாக பார்த்து கன்னத்தில் போட்டுக்கொள்ளும் இலட்சக்கணக்கான மக்கள் அவன் முன்னால் கூடுகிறார்கள். இந்த சிவராத்திரி அன்று அவனது தரிசனத்தை யூடியுபில் பார்த்துவிட்டு, வந்திருக்கும் கமெண்ட்களைப் பார்த்தால் இன்னும் தெளிவாகும். 33 வயதில் அவனை இந்த உயரத்திற்கு கொண்டு வந்து உட்கார வைத்தது யார் அல்லது எது?

அவனது தியானபீடம் சென்று அங்கு அவன் என்ன நிகழ்த்திக்கொண்டு இருக்கிறான் எனப் பாருங்கள். சன் டிவி வீடியோவில் கதனகுதூகலமாக பார்த்த ஆள் அங்கே ஒரு பெரிய ஆசனத்தில் எப்படி வீற்றிருக்கிறான் என பாருங்கள். அதற்குள் மேலும் சென்றால் கண்களை மூடி மெல்லத் திறந்து அருட்பெருஞ்ஜோதியாய் அந்த முகம் எப்படி சிரிக்கிறது என பாருங்கள். உண்மைகள் தெரிய வரலாம். அப்போதாவது கோபம் வருகிறதா என பாருங்கள்.

தயவுசெய்து அவனோடு இருக்கும் அந்த நடிகை யார் என்பதை மட்டும் ஆராய்ச்சி செய்து காணாமல் போகாதீர்கள்.


கீழ்த்தரமான சன் டிவியும், தினகரன் பத்திரிகையும்

நித்யானந்தாவின் பரபரப்புகளுக்குள் உடனடியாக ஒன்றை தெரிவிக்கத் தோன்றியது. ‘நித்யானந்தா போன்றவர்கள் எப்படி இந்த உயரத்திற்குச் செல்ல முடிகிறது என்ற கேள்வியை எழுப்புங்கள்’என்று நேற்றைய பதிவில் எழுதி இருந்தேன். ஆட்டம் சரியான திசையில் செல்ல வேண்டுமே என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடுதான்.

யாரும் துருவ நட்சத்திரமாக முளைத்தவரில்லை. நித்யானந்தாவின் சாதாரண வாழ்க்கைக் குறிப்பை எல்லோரும் இன்னேரம் அறிந்திருப்பீர்கள். அவனை இந்த உயரத்திற்கு கொண்டு வந்ததில் சமூகத்திற்கே பெரும்பங்கு இருக்கிறது. தங்களுக்கான நம்பிக்கையாக, அமைதியைத தருகிற இடமாக அவனை ஏற்றுக்கொண்டவர்கள் இந்த மக்கள்தானே. அதை திட்டமிட்டு உருவாக்கியதில் சில ஊடகங்களுக்கும், கார்ப்பரேட்களுக்கும் நோக்கமிருந்திருக்கிறது தமிழ்ச்செல்வன் சொல்வது போல. நாம் நம்மை சுய விமர்சனமாக பார்த்துக்கொள்ள வேண்டிய விஷயங்களும் ஏராளமாய் இருக்கின்றன தீபாசொல்வது போல. அனுபவங்களே நம்மை வழிநடத்தும்; ஆரூடங்கள் அல்ல. ஒரு சம்பவத்தை நபர்களுக்குள் குறுக்கிப் பார்ப்பது கற்றுக்கொள்ள வேண்டிய அனுபவங்களைத் தராது. எனவேதான் ‘நித்யானந்தாவோடு இருக்கும் நடிகை யார் என ஆராய்ச்சி செய்யாதீர்கள்’என்று முடித்திருந்தேன்.

ஆட்டத்தை ஆரம்பித்தவர்கள் இப்போது செய்கிற அழிச்சாட்டியங்கள் தாங்க முடியவில்லை. உலகம் முழுவ்தும் உள்ள தமிழர்களுக்காகவே அவதரித்த சன் டி.வியும், செய்திகளை உடனுக்குடன் தருகிற தினகரனும் அசிங்கமாய், அருவருப்பாய் ஆபாசமாய் காட்சி தருகிறார்கள். முதல்நாள் முகத்தை மறைத்து குறுகுறுப்பை ஏற்படுத்தியவர்கள் அடுத்தநாள் முகத்தைக் காட்டினார்கள். திரும்பத் திரும்பக் காட்டினார்கள். காட்டிக்கொண்டே இருந்தார்கள். இன்று தினகரனில் நித்யானந்தா மற்றும் ரஞ்சிதாவைப் பற்றி மட்டும் இரண்டு முழுப்பக்கச் செய்திகள். அவர்கள் இருவரும் இணைந்திருப்பது போல பல படங்கள். தமிழகம் முழுவதும் பக்தர்கள் கொந்தளிப்பு என சில படங்கள். நித்யானந்தாவின் முழுநீளப்படங்கள் எங்கு கிடைக்கும் என முகவரிகள் வேறு. த்தூ.... வெட்கம் கெட்டவர்களே! உங்கள் நோக்கம்தான் என்ன?

ஒரு விஷயத்தை அம்பலப்படுத்துவது என்றால் இப்படியா? எங்கோ ஒரு தனி அறையில் நடந்ததை நம் வீட்டு வரவேற்பறையில் வந்து கொட்டினார்கள். முகம்சுளித்து, இப்படியான குப்பைகள் சமூகத்தில் இருக்கிறதே என நாம் வருத்தப்படலாம். அதனை சுத்தம் செய்ய முனையலாம். சமூகத்தில் ஒரு உரையாடல் நடப்பதற்கு அதுவே போதுமானது. திரும்பத் திரும்ப வீட்டிற்குள் வந்து குப்பைகளை கொட்டிக்கொண்டே இருந்தால்..? வீடே குப்பையாகிப் போகாதா? நம் சிந்தனைகளையும் அழுக்காக்கும் நோக்கம்தானே அது? இதைத்தானே அவர்கள் தங்கள் பிறவியின் நோக்கமாய் செய்துகொண்டு இருக்கிறார்கள். ‘நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு’ என்னும் மகாகவியின் ஆத்திர வரிகளே நினைவுக்கு வருகின்றன.

இவர்களின் ஆட்டத்தில் வேறு சூது இருக்கிறது. திரைமறைவு சூட்சுமங்கள் இருக்கின்றன. கூடவே மக்களை இதுபோன்ற அந்தரங்கங்களுக்குள் எட்டிப் பார்க்க வைத்து, கேவலப்படுத்தி, ‘கடை விரித்தேன் கொள்வாருண்டு’ என்று சொல்லவும் செய்வார்கள். சகலத்தையும் வியாபார மயமாக்கி, பெரும் கலாச்சாரச் சீரழிவுகளுக்கு காரணமாகி வரும் இவர்களிடம் சமூக அக்கறையை ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது. இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பும் போதெல்லாம் நாடெங்கிலுமுள்ள உண்மையான சாமியார்கள் வருத்தப்படுகின்றனர் என ஒரு செய்தி வேறு. யாரைக் காப்பாற்ற இந்த வாசிப்பு?

போலீஸ் விரட்டியடித்ததில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மூன்று மாணவர்கள் பலியானார்களே அதைப்பற்றித் திரும்பத் திரும்ப இந்த யோக்கியசிகாமணிகள் பேசட்டுமே, பார்ப்போம். டீசல், பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து போரட்டங்கள் நடக்கின்றனவே, அதைப் பற்றி விளக்கமாக காண்பிக்கட்டுமே, விரிவாக பேசட்டுமே, பார்ப்போம். இவர்கள் பார்வையில் படாமல் ஓராயிரம் உண்மைகள் வெளியே இருக்கின்றன. எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் ஒன்றும் குருடர்கள் அல்ல.

பி.கு:

சந்தனமுல்லை, டாக்டர் ருத்ரன், சுரேஷ் கண்ணன் ஆகியோரது பதிவுகளும் இவ்விஷயத்தில் முக்கியமானவையென்று கருதுகிறேன்.

http://mathavaraj.blogspot.com/2010/03/blog-post_04.html

நித்யானந்தா VS பெரியவா !

இந்த கன்றாவிகளைப் பற்றி எழுத வேண்டாம் என்று நினைத்தாலும் செய்திகளைப் பற்றி படிக்கும் போது எழுதினால் என்ன என்று நினைக்கத் தோன்றுகிறது.

நித்தியானந்தா மீதான திடீர் புகார் - முழுமையாக விசாரிக்க வேண்டும் - ராம கோபாலன்

இது போன்று முறைகேடுகள், விதவைகள் மீது பாலியல் தொந்தரவு (அணுராதா ரமணன் உட்பட), நம்பிக்கை மோசடி கூடுதலாக கொலை ஆகியவற்றுடன், ஆபாச வீடியோ வெளியீடுகள் மட்டும் இல்லாமல் காஞ்சிபுரம் பெரியவாவை உள்ளே வைத்து விசாரணை நடத்திய போது அரசுக்கு எதிராக போராடியவர்கள் தான் இராம கோபாலன் தலைமையிலான இந்து அமைப்புகள்.

நித்யானந்த மேட்டரில் விசாரனை நடை பெற வேண்டும் என்று உடனடியாக கேட்பதில் இருந்து இந்த அமைப்புகளின் உள்நோக்கம் பற்றி நினைக்க வேண்டி இருக்கிறது.

பெரியவா சின்னவாக்களின் மீது விசாரணையே கூடாது, அவர் தவறு செய்யக் கூடியவர் அல்ல என்று வரிந்து கட்டியவை நித்யானந்ததின் மீது நடவடிக்கை எடுக்கக் கோருவதின் பற்றி நினைத்தால் வெறும் பார்பனர் / பார்பனர் அல்லாதவர் என்கிற அரசியலே காரணம். மற்றபடி இந்து மதத்தை இவர்கள் துய்மை படுத்த நடவெடிக்கை எடுக்கச் சொல்கிறார்கள் என்று நினைக்க முடியவில்லை.

பெரியாவா மீது நடவடிக்கை எடுக்கக் கேட்டுக் கொண்டிருக்க வேண்டியதில்லை என்றாலும் குறைந்த பட்சமாக விசாரணை நடை பெற்றால் உண்மை தெரியும், எனவே இது பற்றி நாங்கள் மவுனம் சாதிக்கிறோம் என்றாவது கூறி இருக்கலாம், ஆனால் சு.சாமி மற்றும் ஏவி எம் நிறுவன உரிமையாளர்களுடம் சென்று விசாரணைக்கு எதிராக கவர்னரிடம் மனு கொடுத்து காஞ்சியைக் காப்பாற்ற வேண்டியவர்கள் தான் இந்த இந்து அமைப்புகள்.

ஒருவரை நீதிமன்றம் சாட்சிகளின் வழியாக குற்றவாளி என்றால் மட்டுமே ஒருவர் குற்றவாளி என்பது நடைமுறை ஆனால் ஒருவர் மீது குற்ற அடிப்படைகளை வைத்து குற்றம் சுமத்தி விசாரணைக் கோருவது தவறே இல்லை. அப்படி பட்ட குற்றச் சாட்டுகள் பெரியவாளுக்கு எதிராக பதிய வைத்தற்குக் கூட எதிர்ப்பு காட்டிய இந்து அமைப்புகள் நித்யானந்ததிற்கு மட்டும் உடனடியாக விசாரணைக் கோருவது ஏன் ?

காரணம் மிக எளிது, நித்யானந்தம் ஒரு சூத்திரன், மேலும் (வீடியோவில் பார்த்ததில்) மிகவும் கருப்பாகவே இருக்கிறான், அவனிடம் பார்பன லட்சணம் என்று கூறிக் கொள்ளும் ஒரு அடையாளமும் இல்லை. போட்டிக்கு கல்லா கட்டியவன் என்பதைத் தவிர்த்து வேறு காரணங்கள் தெரியவில்லை.

******

இராம கோபாலன் மற்று இந்து மதத்தைக் காப்பாற்றுகிறேன் என்று சொல்லுபவர்களும், சில இந்து அமைப்புகளும் பார்பனிய / வருணாசிரம நலம் காப்பவர்கள் என்பதற்கு இது மற்றொரு எடுத்துக்காட்டாகவே உள்ளது.

நித்யாநந்தம் யோக்கிய சிகாமணி பார்பனரல்லாதவர்கள் அவனைப் பற்றிப் பேசாதீர்கள் என்று சொல்வதற்காக நான் இதைச் சொல்லவில்லை. ஆனால் ஆன்மிகம் என்ற பெயரில் அரசியல் நடத்துபவர்கள், பெரும்பான்மை இந்துக்களின் ஆதரவு பெற வேண்டும் என்று நினைக்கும் இந்து அமைப்புகள் எப்படி ஒரு பக்க சார்பாக நடந்து கொள்கிறார்கள் என்று புரிந்து கொள்ளவேண்டும். இது போன்ற அமைப்புகளால் இந்து மதம் மெய்யாலுமே காக்கப்படுமா ? ஆனால் இதே அமைப்புகள் மார்ச் 2 முன்பு, நித்யானந்ததின் செல்வாக்கு, வளர்ச்சி, உறுப்பினர் எண்ணிக்கை ஆகியவற்றை வைத்து நித்யானந்தம் இந்து மதத்தின் புதிய சூரியன், நவீன விவேகாநந்தர் என்று புகழ்ந்தவைகள் தாம். ஒரு பார்பன சாமியார் சிக்கினால் அவர் தப்பே செய்யாதவர் என்றும், அதுவே ஒரு சூத்திர சாமியார் சிக்கினால் நடவெடிக்கை கோருவதென்றால் அதில் உள்நோக்கம் இன்றி வேறென்ன, இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம், இந்து அமைப்பு என்ற போர்வைகள் யாரைக் காப்பதற்கு என்று, இவர்கள் ஒட்டு மொத்த இந்துக்களின் நலனையும் இந்து மதத்தின் நலனையோ, இந்து தெய்வங்களின் நலனையோ காக்கிறார்கள் என்று நினைப்பவர்கள் தான் யோசிக்க வேண்டும். இது போன்ற பக்க சார்பு அமைப்புகளை நம்பும் நம்மால் இந்துகளுக்குள் ஒற்றுமையாவது வளர்க்க முடியுமா ?

இன்னும் ஒரு இடத்தில் சந்தடி சாக்கில் ஒரு இஸ்லாமியர் 'எங்க மதத்தில் துறவரம் கிடையாது....இது போன்று நடப்பதில்லை' என்கிறார். எல்லோரும் இஸ்லாமியராக மாறுங்கள் உண்மையான இறைவனை அடையுங்கள் என்கிறாரா தெரியவில்லை. அப்பாவிகளை தீவிரவாதிகளாக்கி, தற்கொலை படைகளாக மாற்றி இறக்குவதைவிட சாமியார்களின் செக்ஸ் லீலைகள் எனக்கு பெரியதாகவே தெரியவில்லை. எல்லா மதத்திலும் எல்லா கன்றாவிகளும் இருக்கு. அதனால் கைகொட்டி சிரிப்பவர்களும், உள்ளுற புழுக்கம் அடைவர்களும் இது போன்ற நிகழ்வுகளை சாட்சியாக பார்த்துக் கொண்டு முடிந்தால் எதிர்ப்புகளை அங்கங்கே தெரிவிக்கலாம்.

படம் : நன்றி வினவு

http://govikannan.blogspot.com/2010/03/vs.html