Thursday, March 4, 2010

கீழ்த்தரமான சன் டிவியும், தினகரன் பத்திரிகையும்

நித்யானந்தாவின் பரபரப்புகளுக்குள் உடனடியாக ஒன்றை தெரிவிக்கத் தோன்றியது. ‘நித்யானந்தா போன்றவர்கள் எப்படி இந்த உயரத்திற்குச் செல்ல முடிகிறது என்ற கேள்வியை எழுப்புங்கள்’என்று நேற்றைய பதிவில் எழுதி இருந்தேன். ஆட்டம் சரியான திசையில் செல்ல வேண்டுமே என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடுதான்.

யாரும் துருவ நட்சத்திரமாக முளைத்தவரில்லை. நித்யானந்தாவின் சாதாரண வாழ்க்கைக் குறிப்பை எல்லோரும் இன்னேரம் அறிந்திருப்பீர்கள். அவனை இந்த உயரத்திற்கு கொண்டு வந்ததில் சமூகத்திற்கே பெரும்பங்கு இருக்கிறது. தங்களுக்கான நம்பிக்கையாக, அமைதியைத தருகிற இடமாக அவனை ஏற்றுக்கொண்டவர்கள் இந்த மக்கள்தானே. அதை திட்டமிட்டு உருவாக்கியதில் சில ஊடகங்களுக்கும், கார்ப்பரேட்களுக்கும் நோக்கமிருந்திருக்கிறது தமிழ்ச்செல்வன் சொல்வது போல. நாம் நம்மை சுய விமர்சனமாக பார்த்துக்கொள்ள வேண்டிய விஷயங்களும் ஏராளமாய் இருக்கின்றன தீபாசொல்வது போல. அனுபவங்களே நம்மை வழிநடத்தும்; ஆரூடங்கள் அல்ல. ஒரு சம்பவத்தை நபர்களுக்குள் குறுக்கிப் பார்ப்பது கற்றுக்கொள்ள வேண்டிய அனுபவங்களைத் தராது. எனவேதான் ‘நித்யானந்தாவோடு இருக்கும் நடிகை யார் என ஆராய்ச்சி செய்யாதீர்கள்’என்று முடித்திருந்தேன்.

ஆட்டத்தை ஆரம்பித்தவர்கள் இப்போது செய்கிற அழிச்சாட்டியங்கள் தாங்க முடியவில்லை. உலகம் முழுவ்தும் உள்ள தமிழர்களுக்காகவே அவதரித்த சன் டி.வியும், செய்திகளை உடனுக்குடன் தருகிற தினகரனும் அசிங்கமாய், அருவருப்பாய் ஆபாசமாய் காட்சி தருகிறார்கள். முதல்நாள் முகத்தை மறைத்து குறுகுறுப்பை ஏற்படுத்தியவர்கள் அடுத்தநாள் முகத்தைக் காட்டினார்கள். திரும்பத் திரும்பக் காட்டினார்கள். காட்டிக்கொண்டே இருந்தார்கள். இன்று தினகரனில் நித்யானந்தா மற்றும் ரஞ்சிதாவைப் பற்றி மட்டும் இரண்டு முழுப்பக்கச் செய்திகள். அவர்கள் இருவரும் இணைந்திருப்பது போல பல படங்கள். தமிழகம் முழுவதும் பக்தர்கள் கொந்தளிப்பு என சில படங்கள். நித்யானந்தாவின் முழுநீளப்படங்கள் எங்கு கிடைக்கும் என முகவரிகள் வேறு. த்தூ.... வெட்கம் கெட்டவர்களே! உங்கள் நோக்கம்தான் என்ன?

ஒரு விஷயத்தை அம்பலப்படுத்துவது என்றால் இப்படியா? எங்கோ ஒரு தனி அறையில் நடந்ததை நம் வீட்டு வரவேற்பறையில் வந்து கொட்டினார்கள். முகம்சுளித்து, இப்படியான குப்பைகள் சமூகத்தில் இருக்கிறதே என நாம் வருத்தப்படலாம். அதனை சுத்தம் செய்ய முனையலாம். சமூகத்தில் ஒரு உரையாடல் நடப்பதற்கு அதுவே போதுமானது. திரும்பத் திரும்ப வீட்டிற்குள் வந்து குப்பைகளை கொட்டிக்கொண்டே இருந்தால்..? வீடே குப்பையாகிப் போகாதா? நம் சிந்தனைகளையும் அழுக்காக்கும் நோக்கம்தானே அது? இதைத்தானே அவர்கள் தங்கள் பிறவியின் நோக்கமாய் செய்துகொண்டு இருக்கிறார்கள். ‘நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு’ என்னும் மகாகவியின் ஆத்திர வரிகளே நினைவுக்கு வருகின்றன.

இவர்களின் ஆட்டத்தில் வேறு சூது இருக்கிறது. திரைமறைவு சூட்சுமங்கள் இருக்கின்றன. கூடவே மக்களை இதுபோன்ற அந்தரங்கங்களுக்குள் எட்டிப் பார்க்க வைத்து, கேவலப்படுத்தி, ‘கடை விரித்தேன் கொள்வாருண்டு’ என்று சொல்லவும் செய்வார்கள். சகலத்தையும் வியாபார மயமாக்கி, பெரும் கலாச்சாரச் சீரழிவுகளுக்கு காரணமாகி வரும் இவர்களிடம் சமூக அக்கறையை ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது. இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பும் போதெல்லாம் நாடெங்கிலுமுள்ள உண்மையான சாமியார்கள் வருத்தப்படுகின்றனர் என ஒரு செய்தி வேறு. யாரைக் காப்பாற்ற இந்த வாசிப்பு?

போலீஸ் விரட்டியடித்ததில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மூன்று மாணவர்கள் பலியானார்களே அதைப்பற்றித் திரும்பத் திரும்ப இந்த யோக்கியசிகாமணிகள் பேசட்டுமே, பார்ப்போம். டீசல், பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து போரட்டங்கள் நடக்கின்றனவே, அதைப் பற்றி விளக்கமாக காண்பிக்கட்டுமே, விரிவாக பேசட்டுமே, பார்ப்போம். இவர்கள் பார்வையில் படாமல் ஓராயிரம் உண்மைகள் வெளியே இருக்கின்றன. எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் ஒன்றும் குருடர்கள் அல்ல.

பி.கு:

சந்தனமுல்லை, டாக்டர் ருத்ரன், சுரேஷ் கண்ணன் ஆகியோரது பதிவுகளும் இவ்விஷயத்தில் முக்கியமானவையென்று கருதுகிறேன்.

http://mathavaraj.blogspot.com/2010/03/blog-post_04.html

No comments:

Post a Comment